திருச்சி:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஆடுகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும் அதிக விற்பனை நடைபெறாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் மிகவும் புகழ்பெற்ற மணப்பாறையில், ஆட்டுச்சந்தை இன்று நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்திருந்தனர். இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை துவங்கி புதன் கிழமை பிற்பகல் வரை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் அதிகளவில் விற்பனையாகும் என்பதால் தங்களது ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என எண்ணி ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை விற்பனை செய்வதற்காக அதிகளவில் மணப்பாறை சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இன்று காலை நடைபெற்ற சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை கணிசமாகக் குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், தீபாவளி பண்டிகைக்காக அதிகளவில் ஆடுகள் வாங்குவதற்காகத் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெருமளவில் வியாபாரிகளும் வந்திருந்தனர்.