திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்துநிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம்-2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.
சட்ட நகலை எரிக்கலாமா? விவசாயியை குண்டுக்கட்டாகத் தூக்கிய காவல்துறை!
திருச்சி: சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயியை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது எதிர்பாராதவிதமாக விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் சட்ட நகலை எரிக்க முயன்றார். கழுகு பார்வையுடன் போராட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் இந்த சம்பவம் அரங்கேறவிடாமல், அவ்விவசாயியை குண்டுக்கட்டாகத் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ’காவல்துறை அராஜகம் ஒழிக’ என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விவசாய சங்கத்தைச் சேர்ந்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்று அடைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா - ஒரு நோயாளியைக்கூட சேர்க்காத தனியார் மருத்துவமனைகள்!