திருச்சி:தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 45வது நாளான இன்று (செப்.16) விவசாயிகளுக்கு மத்திய அரசு மொட்டை அடித்து விட்டதாகக் கூறி, மொட்டை அடிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகள்:- “2016 -இல் வறட்சியின் பொழுது, பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தைப் பெறாமலேயே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது.
ஆகையால், விவசாயக் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.
அதேபோல் ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு அணையில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெற முடியும். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.