திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திடீரென அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில் இருந்து அங்கப்பிரதட்சணம் செய்தவாறு கூட்டம் நடந்த அரங்கிற்கு வந்தனர். தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறினர்.
அங்கப்பிரதட்சணம் செய்து நூதன முறையில் விவசாயிகள் போராட்டம் - Ayyakannu
திருச்சி: தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலிலிருந்து விவசாயிகள் அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது 90 விழுக்காடு வயலில் விவசாயிகள் சாகுபடி செய்யாமல் உள்ளனர். சுவராஜ் அபியான் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும். வறட்சி பாதித்த மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிக்க வேண்டும் என தெரிவித்த அவர், காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள இந்த சூழ்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினார். உடனடியாக அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி வேலூரில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.