தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், இன்று காலை திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் அரை நிர்வாணக் கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இப்போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு , ”சரித்திரம் காணாத வகையில் வைரஸ் உலகத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்திய விவசாயிகள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாகுபடி செய்யப்படவிருந்த இரண்டு லட்சம் ஏக்கர் வாழைப் பயிர்கள் சூறாவளி காற்றில் ஒடிந்து விழுந்து நாசமாயின.
விழாக்கள் இல்லாததால் பறிக்க முடியாத நிலைமையில் இரண்டு முதல் நான்கு லட்சம் ஏக்கர் வெற்றிலை சாகுபடி தடைபட்டுள்ளது. உணவு விடுதிகள் செயல்படாததால் வாழை இலைகள் விற்பனையாகவில்லை. வெள்ளரிக்காய் வாங்க ஆள் இல்லாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் கடன் கொடுத்தவர்கள் விவசாயிகளை மிரட்டி வருகின்றனர். மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளது. 86 ஆயிரத்து 600 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் அவர் யாருக்கு கடன் கொடுத்தார் என்பது தெரியவில்லை. பொய்யான தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனாவால் 10 பேர் உயிரிழந்தால், விவசாயக் கடன் காரணமாக 100 விவசாயிகள் இறக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எங்களது கோரிக்கை மனுவை திருச்சி ஆட்சியர் மூலமாக மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க :ஒரு பிஸ்கெட்தான்: 130 கி.மீ. நடந்துவந்த குடிபெயர்ந்தோருக்கு உணவளித்த டிசிபி!