திருச்சிராப்பள்ளி:பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்தினால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் கீழக்குறிச்சி கிராமம் பகுதியில் புதிய விமான நிலைய விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இந்த விவசாய பகுதிகள் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களாக உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதில் ஒரு சிலர் நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசுக்கு கொடுத்துள்ளனர். இதில் விவசாய நிலங்களை கொடுக்க விரும்பாத 21 நபர்கள் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். 100 ஏக்கர் மதிப்புள்ள 21 விவசாய இடங்களில் விவசாயம் நடைபெறுவதாகவும் தற்பொழுது வரை விவசாயம் செய்து கொண்டிருக்கும் இடத்தில் தரிசு நிலங்கள் என கூறி குறைந்த விலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் நிலங்களை கொடுக்க விருப்பமில்லை என வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இது தொடர்பான விசாரணைக்கு இடத்திற்கு சொந்தமான 21 நபர்களை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி இன்று மூன்று மணி அளவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் மதியம் 2.30 மணி முதல் காத்திருந்த நிலையில், விவசாயிகளின் விருப்பத்தை கேட்க திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி வராத நிலையில் 5:30 மணி வரை காத்திருந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.