திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு, பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவரை ரங்கராஜ நரசிம்மன் என்பவர், 'நீங்கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்' எனக்கூறி தடுத்து நிறுத்தி, ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜாகிர் உசேன், "தாம் இக்கோயிலுக்கு அடிக்கடி வருவது வழக்கமான ஒன்றுதான். யூ-ட்யூப் சேனல் நடத்தும் ரங்கராஜனுக்கு என்னைத் தடுக்க என்ன உரிமை உள்ளது. எந்த மதத்தைச் சார்ந்தவரும் மனமுவந்து எந்த தெய்வத்தையும் வணங்கலாம் என்ற நடைமுறை உள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.