ரயில்வேயில் முன்னாள் ராணுவத்தினருக்கு கேட் கீப்பர் பணி வழங்குவது தொடர்பாக ராணுவத்திற்கும், தெற்கு ரயில்வேக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 419 முன்னாள் ராணுவத்தினருக்கு கேட் கீப்பர் பணிக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் படிப்படியாக 145 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாகவும் பயிற்சி நடைபெற்றது. இதன்மூலம் மொத்தம் 200 பேர் பயிற்சி முடித்து பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பயிற்சி முடித்த 100 முன்னாள் ராணுவத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணுவ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இழுத்தடிக்கப்படும் பணி நியமனம்; ராணுவ அலுவலகத்தை முற்றுகையிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள்
திருச்சி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட ஹவில்தார் வெங்கடேசன், தமிழகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. செக்யூரிட்டி வேலைகளுக்கு மட்டுமே முன்னாள் ராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழக அரசு இதில் தலையிட்டு முன்னாள் ராணுவத்தினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அரசுப் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இந்த பயிற்சி முடித்துள்ள முன்னாள் ராணுவத்தினர் அனைவரும், ஏற்கனவே பார்த்த வேலைகளை விட்டுவிட்டு இந்த பணிக்காக காத்திருக்கின்றனர்.
பணி ஆணை வழங்கப்படுவது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கிவிட்டதால் பணி ஆணை வழங்க இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். தற்போது மே 24ஆம் தேதி பணி நியமன ஆணை வழங்குவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை. ஆகையால் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. தொடர்ந்து ரயில்வேயில் தமிழர்களை பணியமர்த்த அங்குள்ள அதிகாரிகள் தயாராக இல்லை. இதன் காரணமாகவே பணி நியமன ஆணை தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகளும் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரை தொடர்பு கொண்டு முறையிடுவோம் என கூறினார்.