கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் நகராட்சி சார்பில் அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு பகுதிக்கும் எந்தெந்த நாள்களில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வெளியில் வர வேண்டும் என்பதற்காக ஆறு விதமான துண்டுச் சீட்டுக்களை வழங்கினர். அதனைப் பின்பற்றி மக்கள் வெளியில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அந்தச் சீட்டுக்களைப் பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களாக நகராட்சி சந்தைகளுக்கு வரும் பொதுமக்கள், சந்தையின் முன்பகுதியில் காவல்துறையினர் யாரும் இல்லாததால் வழக்கம் போல் வந்துசென்றனர். அதனால் அப்பகுதி தன்னார்வலர்கள் கரோனா தடுப்பில் காவல்துறையின் பங்கு என்ன என்று கேள்வி எழுப்பினர். அதைப்பற்றி ஈடிவி பாரத் தமிழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மணப்பாறை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் இன்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.