தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2023, 11:18 AM IST

ETV Bharat / state

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுக ஆட்சி அவ்வளவுதான் - எடப்பாடி பழனிசாமி

திருச்சி திருவெறும்பூர் ‌பெல் நிறுவன வளாகத்தில்‌ நிறுவப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலையை அதிமுக பொதுச் செயளாலர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

edappadi palanisamy
எடப்பாடி பழனிசாமி

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் ‌பெல் நிறுவன வளாகத்தில்‌ நிறுவப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழாவானது நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தனக்கு பின்னாலும் ஒரு தொண்டன் வர வேண்டும் என்று கட்சி நடத்தினர். ஜனநாயக அமைப்பாக உள்ள அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட, பொதுச் செயலாளராக வர முடியும்.

அதிமுகவை உடைப்பதற்காக, ஸ்டாலின் எத்தனையோ முயற்சி மேற்கொண்டார். எந்த கொம்பனாலும், உயிரோட்டமுள்ள இயக்கத்தை எத்தனை அவதாரம் எடுத்தாலும், யாரும் தொட்டுப் பார்க்க முடியாது. அண்ணன் பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் துணையுடன் ‘பி’ டீமை உருவாக்கினார்.

ஸ்டாலின் எத்தனை, ‘பி’ டீமை உருவாக்கினாலும், அதிமுகவை அழிக்க முடியாது. வீட்டில் இருக்கும் குடும்பத்தினர், ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக அதிமுக தோற்றுவிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவைத் தோற்றுவித்தார்.

தமிழ்நாட்டில் 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்தது. ஆனால், எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து, மத்தியில் ஆட்சியை ஏற்படுத்துவேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின், மத்திய அரசை எப்படி காப்பாற்றப் போகிறார்? திமுக அமைச்சர்களுக்கும், முன்னனோடி நிர்வாகிகளுக்கும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்து விடுவார்களோ என்று ஜுரம் வந்து விட்டது. அவர்களுக்கு தூக்கம் போய் விட்டது.

அதிமுகவினரை கிண்டல் செய்த திமுகவினருக்கு என்ன வந்திருக்கிறது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். எங்களுக்கு மடியில் கணமில்லை; அதனால், வழியில் பயம் இல்லை. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால், நீங்கள் கோட்டையில் இருக்க மாட்டீர்கள்.

இதையும் படிங்க:அதிமுக அமைச்சர்களை காப்பாற்ற ஆளுநர் தந்திரமாக செயல்படுகிறார் - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சி, இருண்ட கால ஆட்சி. இரண்டு ஆண்டுகளில் துறை வாரியாக ஸ்டாலின் குடும்பத்தினரும், அமைச்சர்களும் கொள்ளையடித்துள்ளனர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் குறிப்பிட்ட 30 ஆயிரம் கோடிதான், திமுகவினரை படாதபாடுபடுத்துகிறது. அந்த பணம் எல்லாமே செந்தில் பாலாஜியிடம் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. அவர் வாய் திறந்து விட்டால், இந்த ஆட்சி கவிழ்ந்து விடும்.

செந்தில் பாலாஜிக்கு ஆறுதல் சொல்ல யாரும் செல்லவில்லை. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள அவரை பார்க்கச் செல்கின்றனர். கொள்ளைப்புறத்தில் ஆட்சிக்கு வந்தவர்களால், மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது. கோட் சூட் போட்டு, போட்டோ ஷூட் எடுக்கும் ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர். திறமையற்ற முதலமைச்சராக இருக்கிறார்.

‘தொட்டுப்பார், சீண்டிப்பார்’ என்று பேப்பரில் எழுதிக் கொடுத்ததை பேசிக் கொண்டிருந்த ஸ்டாலினை, இப்போது சீண்டிப் பார்த்து விட்டனர், அவரால் என்ன செய்ய முடிந்தது? ‘எங்களை அடித்தால், திருப்பி அடிப்போம்’ என்று முதலமைச்சரே சொன்னால், யார் சட்டத்தை பாதுகாப்பது? திமுகவினர் எந்த ஒரு தரமான திட்டத்தையும் கொண்டு வந்து சாதிக்கவில்லை.

ஏழை மக்களுக்கான திட்டங்களை தடுக்கும் அரசாகத்தான் திமுக செயல்படுகிறது. நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளேயே வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு சட்டம்– ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் திமுக அரசு இல்லை.

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால், கர்நாடகாவிலிருந்து திறக்க வேண்டிய 9 டி.எம்.சி தண்ணீரை இதுவரை கேட்டுப் பெறவில்லை. கடைமடைக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. முதலமைச்சருக்கு, தமிழ்நாட்டு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், கர்நாடகாவை கண்டித்து குரல் கொடுத்திருக்க வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்படி, தண்ணீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசை தட்டிக் கேட்கும் திராணி ஸ்டாலினுக்கு இல்லை. ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, மக்களைப் பற்றி கவலை இல்லை. இன்பநிதி தலைமைக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று அமைச்சரே சொல்லும் அளவுக்கு திமுகவினர் அடிமைத்தனமாக உள்ளனர்” என்றார்.

மேலும், இந்த விழாவில், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சிவபதி, முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:தமிழகத்தில் ஆளும் இயக்கத்திற்கு எதிராக ஓங்கி ஒழிக்கும் குரல் அண்ணாமலை - சி.பி.ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details