திருச்சி: காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் இல்லத்திற்கு , காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் வந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர் கே.எஸ். அழகிரி, "நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து தவறான வீடியோவை அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசியலில் காமராஜர் காலத்திலிருந்து எதிரும் புதிருமான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பழிவாங்கும் அரசியல், கேவலமான அரசியல், பிளாக் மெயில் செய்யும் அரசியல் என்பது பா.ஜ.க வந்த பிறகு, குறிப்பாக அண்ணாமலை வந்த பிறகு தான் நடக்கிறது.
நிதியமைச்சர் பண்பான குடும்பத்தில் பிறந்தவர். அவரை மையப்படுத்தி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தவறான குற்றச்சாட்டை வைப்பது கேவலமானது. கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம். அரசாங்கத்தையும் அதன் நடைமுறையினையும் விமர்சிக்கலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் அண்ணாமலை செய்வது போல் ஒரு செயலை செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த கலாசாரத்தை காங்கிரஸ் கட்சி வெறுக்கிறது. அண்ணாமலை பேராண்மையோடு அரசியல் செய்ய வேண்டும். அவருடைய கொள்கையைக் கூறி அவரின் கட்சியை வளர்க்க வேண்டும். பிறர் மீது பழி கூறி, சேற்றை வாரி இறைக்கக் கூடாது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. ராகுல் காந்தியின் நேர்மறையான அரசியல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது.
அங்கு ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கும், கார்கேவின் பிரசாரத்திற்கும் மக்கள் அதிக அளவில் வருவது ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது. இந்திய ஜனநாயகம் மிகவும் வலிமையானது. அவதூறுகளை கூறி அதை முடக்க முடியாது. ராகுல் காந்திக்கு எதிராக போடப்பட்ட வழக்கும் சரி, கார்கேக்கு எதிராக பா.ஜ.கவினர் கூறும் குற்றச்சாட்டும் சரி, இந்திய ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.