திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், நாகப்பட்டினம் - கூடலூர் - மைசூரு சாலைகள் இருவழித் தடத்திலிருந்து மூன்று வழித்தடமாக மேம்படுத்தப்படுகிறது.
அதற்காக அச்சாலைகள் அகலப்படுத்துதல், தடுப்புச்சுவர், பாதுகாப்புச் சுவர், வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் திருச்சி குடமுருட்டி பாலம் முதல் ஜீயபுரம் வரை நடைபெற்றுவருகிறது.
அதனால் தற்போதைய சூழலில், திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் செல்கின்ற கனரக சரக்கு வாகனங்களினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேற்படி சாலை மேம்பாட்டு பணிகளில் இடையூறு ஏற்படுகிறது. இந்தப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறவும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும் சிறப்புச் சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், கரூரிலிருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் முசிறி வழியாக நெம்பர் 1 டோல்கேட் வழியாக திருச்சி வர வேண்டும்.
திருச்சியிலிருந்து கரூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கமான சாலை மார்க்கத்திலேயே ஜீயபுரம் வழியாகச் செல்ல வேண்டும். இந்நடைமுறை நாளை (செப்டம்பர் 4) முதல் அமலுக்கு வருகிறது என்று திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில காலமாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்த அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 5 கி.மீ. கட்டிலில் தூக்கிச்சென்ற அவலம்!