தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் ரயில்வே ஊழியர் தவறவிட்ட ரூ.9 லட்சம் பணத்தை மீட்டுத்தந்த ரயில்வே காவலர்கள்!

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் குடிபோதையில் ரயில்வே ஊழியர் தவறவிட்ட 9 லட்சம் ரூபாய் பணத்தை பெண் காவலர்கள் மீட்டுத் தந்தனர்.

staff
staff

By

Published : Feb 15, 2023, 3:35 PM IST

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி அண்ணா நகரைச் சேர்ந்த வெங்கடேசன்(38) என்பவர், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் முதுநிலை டெக்னீசியனாகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கோவையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் வங்கியில் கடன் வாங்கி, கோவையில் சொந்தமாக வீடு கட்டி வருகின்றனர்.

இதனிடையே வெங்கடேசன் வங்கியிலிருந்து 9 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கோவை செல்வதற்காக, நேற்று(பிப்.14) அதிகாலை திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். மங்களூர் விரைவு ரயிலுக்காக முதலாம் நடைமேடையில் காத்திருந்த அவர், மதுபோதையில் மயங்கிவிட்டார். இதனால் கோவை செல்லும் ரயிலையும் தவறவிட்டார்.

இந்த நிலையில் திருச்சி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவலர்கள் விஜயலட்சுமி, நாகலட்சுமி, பிரசாந்த் ஆகியோர் ரயில் நிலைய நடைமேடைகளில் அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடைமேடையில் வெங்கடேசன் போதையில் மயங்கி கிடந்ததை பார்த்துள்ளனர். அவரது அருகே விலை உயர்ந்த செல்போன் ஒன்றும் பை ஒன்றும் கிடந்துள்ளது. காவலர்கள் அவரை எழுப்ப முயன்றும் முடியவில்லை. அவரது பையை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம், வங்கிக் காசோலை, வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்டவை இருந்துள்ளது.

இதனையடுத்து, வெங்கடேசனை ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். வெங்கடேசனுக்கு போதை தெளிந்ததும், கோவையில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் கொடுத்து திருச்சிக்கு வரவழைத்தனர். மாலையில் அவரது மனைவி வந்ததும், அவரது முன்னிலையில் வெங்கடேசனிடம் 9 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தனர். மது குடிக்கக் கூடாது என வெங்கடேசனை எச்சரித்து அனுப்பினர்.

இதையும் படிங்க: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details