திருச்சி: வருகிற 22ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அது மட்டுமல்லாமல், கும்பாபிஷே விழா நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி 11 நாட்கள் விரதமும் மேற்கொண்டுள்ளார். மேலும், மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகிற 20ஆம் தேதி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்து விட்டு, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு திட்டமிட்டுள்ளார். எனவே, நாளை மறுநாள் காலை விமானம் மூலம் பிரதமர் திருச்சி வருகிறார்.
பிரதமரின் திருச்சி வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகர எல்லைக்குள் நேற்று (ஜன.17) முதல் நாளை மறுநாள் (ஜன.20) வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, திருச்சி மாநகர எல்லைக்குள் 17.01.2024 முதல் 20.01.2024 வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க, மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்படுகிறது. எனவே 17.01.2024 முதல் 20.01.2024 வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வீதிகளில் உள்ள கடைகளை சனிக்கிழமை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருப்பவர்களின் விவரங்கள், காவல் துறையினரால் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க:ஜன.20 அன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. வீடு வீடாக போலீசார் ஆய்வு!