திருச்சி: மணப்பாறையில் நேற்று (ஆகஸ்ட் 28) திமுகவின் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என் நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்போது கட்சியின் 400 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் அமைச்சர் பொய்யாமொழியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின் பேசிய மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது, “தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி ஸ்டாலின். மணப்பாறைக்கு அரசு கல்லூரி வர பெரும் உதவியாக இருந்த அவருக்கும், துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் நன்றி. மணப்பாறையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாயனூர் கதவணை உபரி நீரை, மணப்பாறை பொன்னணியாறு அணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதையடுத்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “திமுக என்பது தலைமுறை தலைமுறையாக மக்களுக்காக உழைக்கும் கட்சி. மூன்றாம் தலைமுறை தலைவராக வரவுள்ளவர் உதயநிதி ஸ்டாலின். இந்த கட்சியை உதயநிதி மேலும் வளர்த்தெடுப்பார்" என்றார்.
அதன்பின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடன் சுமையையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். தளபதி கட்டளையிட்டாலும், அவரது கொள்கையில் வழி நடக்கும் திமுக இளைஞர் அணி தலைவர் உத்தரவிட்டாலும், அதை தலை மேல் ஏற்று நடைமுறைப்படுத்த காத்திருக்கிறோம்” என்றார்.