திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர் திருச்சி:திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சி - கிராப்பட்டி பகுதியில் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''திமுக அரசை தமிழகத்திற்கு பெட்டி தூக்கிட்டு வந்தவன் குறை கூறினால் திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. காமராஜர் மறையும் வரை அவருக்காக அனைத்தையும் செய்து கொடுத்தது, திமுக மற்றும் காமராஜருக்கு சிலை வைத்த கட்சி திமுக தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இது தற்போது உள்ள காங்கிரஸ்காரர்களுக்குக் கூட தெரியாது.
இந்நிலையில், காமராஜர் பிரதமர் ஆவதை திமுக தடுத்தது என்று அண்ணாமலை பேசிவருகிறார். காமராஜர் பிரதமர் பதவியை ஒருநாளும் விரும்பவில்லை. நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருத்தர் பிரதமராக வரவேண்டும் என விரும்பியவர் காமராஜர். டில்லியில் 1966ஆம் ஆண்டு காமராஜர் வாழ்ந்த வீட்டை தீ வைத்த கொளுத்தி, அவரை கொல்ல முயன்றவர்கள் அன்றைய ஜனதா சங்கத்தினர், இன்றைய பா.ஜ.க வினர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
அங்கிருந்த திமுக தொண்டன் கோதண்டபாணி என்பவர் வீட்டுக்குள் புகுந்து காமராஜரை காப்பாற்றி உள்ளார். காமராஜர் இறந்த போது, அவருக்கு அரசு மரியாதை செலுத்தி மணி மண்டபமும் கட்டிக்கொடுத்தவர், கருணாநிதி. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என வி.பி.சிங்கிடம் கோரிக்கை வைத்து அதனை வி.பி.சிங் மூலம் நிறைவேற்றி தந்தார், கலைஞர்.
இதையும் படிங்க:காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது - தமிழக விவசாயிகள் சங்கம்
மேலும், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர், கருணாநிதி. கலைஞர் வழியில் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
செந்தில் பாலாஜி குறித்து:அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள வழக்கு அயோக்கியத்தனமானது. அவரை கைது செய்த போது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. நீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது. அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அவர் உயிர் பிழைத்தார். இல்லையென்றால் அவர்கள் செய்த சித்ரவதையில் உயிரிழந்திருப்பார். அவருக்கு நாம் இரங்கல் தீர்மானம் தான் வாசித்திருக்க வேண்டியிருக்கும். அதில் இருந்து அவர் தற்போது தப்பித்துள்ளார்.
செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புக் கூறினாலும், அவர்கள் இருவரும் அமலாக்கத்துறைக்கு கஷ்டடி கேட்க அதிகாரம் இல்லை என்பதைக் கூறி உள்ளார்கள். இதன் மூலம் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது உறுதியாகிறது
பாஜகவின் ஊழல்:மகாராஷ்டிராவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அஜித் பவார் மீது வழக்கு உள்ளது. அவர் பா.ஜ.க விற்கு சென்ற உடன் அங்கே இருக்கும் ஆளுநர் அவருக்கு துணை முதலமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இங்கே உள்ள ஆளுநர் உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
திமுகவிடம் சட்ட ரீதியாக மோதியவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அது ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது முதல் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வாங்கியது வரை திமுகவின் சட்டத்துறையே வென்றுள்ளது. எங்களிடம் மோதி ஒரு போதும் யாரும் வெற்றி பெற முடியாது.
அண்ணாமலைக்கு சவால்:ஆளுநர் என்ன நிலைமைக்கு செல்லப் போகிறார்கள் என்பது இன்னும் 10,15 நாட்களில் தெரியவரும். திமுக தொண்டர்கள் கட்சிக்கு ஒரு சோதனை என்றால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். முதலமைச்சர் பெங்களூர் சென்றால் தடுப்போம் என அண்ணாமலை கூறி உள்ளார். அண்ணாமலைக்கு துணிச்சல் இருந்தால், ஆண் மகனாக இருந்தால், சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர் என்றால், முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும், திமுகவினர் யார் என்று அப்போது தெரியும்” என ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறியதாவது, '' பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அமைப்புச் செயலாளர் பாரதி அவர்கள், திமுக கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவரது இருப்பை காட்டிக் கொள்வதற்காக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறார்.
ஆனால், திமுகவை சேர்ந்த எவரும் அண்ணாமலைக்கு பதில் அளிக்கவில்லை. இன்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் ஒட்டுமொத்த கேள்விக்கும் பதில் கூறியுள்ளார். ஏனென்றால் திமுக மறைந்த முன்னாள் தலைவர் கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப்பற்றி எதிர்க்கட்சிகள் பேசும் போது அவர்களுக்கு நாம் பதில் அளித்தால், அதை ஊடகங்கள் எழுதுவார்கள் என்று நினைத்து அவர்கள் பேசுகிறார்கள்.
அண்ணாமலை பற்றியும் பயப்பட வேண்டியதில்லை. இங்கு இருக்கும் அதிமுகவை பற்றியும் பயப்பட வேண்டியது இல்லை. திருச்சி என்றும் தளபதியின் கோட்டையாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
திருச்சியினை பொறுத்தவரை கலைஞர் மட்டுமல்ல நமது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். எண்ணற்ற பல திட்டங்களை திருச்சிக்கு முதன்மையாக கொடுத்து பணிகளை விரைந்து செய்யவும் ஆணையிட்டு உள்ளார். குறிப்பாக திருச்சியை பொறுத்தவரை அதிமுக கோட்டையைப் பிடிக்க முடியாது. இன்று மட்டுமல்ல எப்போதும் திருச்சி திமுக வசம் தான் இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:Ponmudi: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேர் விடுதலை