திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செயங்குடியைச் சேர்ந்தவர் தாடி மூக்கன் (70). இவர் இப்பகுதியில் திமுகவின் முன்னாள் கிளைச் செயலாளராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் நீட் தேர்வு திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது எனக் கூறினார். இதனால் நேற்றிலிருந்து மனமுடைந்த நிலையில் இருந்த தாடி மூக்கன், இன்று மதியம் போதையில் தனது வீட்டின் அருகேயுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் தான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையிலான காவலர்கள், முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக பிரமுகர் தற்கொலை மிரட்டல் சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அமர்ந்து முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு மறுப்பு!