தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட எடமலைப்பட்டி புதூரில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி 39, 40ஆவது வார்டு பெண்கள் பலர் இதில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கே.என். நேரு பேசுகையில், பாதாளச் சாக்கடைத் திட்டம், சாக்கடை அமைக்க வேண்டும், மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், மயானம் செல்ல வழி வேண்டும், வீடு கட்டித்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மேலும் அவர், "கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
2006ஆம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, திருச்சியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை உடனடியாகப் பார்வையிட்டு தற்காலச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கீடுசெய்தார். அடுத்தகட்டமாக திருச்சி உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே தொட்டிப் பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
இதன்மூலம் தற்போது எந்தக் காலத்திலும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் காதுகொடுத்து கேட்பது கிடையாது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் மூன்று மாதம் காலம் மட்டும் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்பார். அப்போது இந்தப் பணிகள் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பணமோசடி வழக்கில் கைது!