திருச்சி:டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஓம் அகத்தியர் அம்மையப்பன் முதியோர் இல்லம் மற்றும் அறக்கட்டளையில் 8 ம் ஆண்டு வேள்வி அகத்தியர் குருபூஜை விழா நேற்று (செப்-14) நடந்தது. இந்த விழா மற்றும் பங்கேற்ற பேசிய இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் கூறியதாவது, தமிழகத்தில், சனாதனம் குறித்த அவதூறு கருத்து பரப்பப்படுகிறது. சனாதனம் என்பது தொன்மையான தர்மம். தமிழக அரசின் பாடப்புத்தகத்திலும் கூட, சனாதன தர்மம் பற்றி உள்ளது. ஆனால், மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம் என்றெல்லாம் கூறியவர்கள், அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் ஒரு சில கோட்பாட்டை எதிர்ப்பதாகச் சொல்கின்றனர்.
சனாதனம் என்ற வார்த்தையைத் தடை செய்து விட்டது போல், அரசு இயந்திரத்தின் செயல்பாடு உள்ளது. திருவாரூர் திரு.வி.க., கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்துப் பேசுவதற்கான சுற்றறிக்கையே அனுப்பி உள்ளனர். இது தவறான முன்னுதாரணம். திலகர் காலத்தில் இந்து சமய ஒற்றுமை விழாவாக நடந்த விநாயகர் ஊர்வலம், பன்னெடும் காலமாக நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சியாளர்கள் வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். லஞ்சம் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை கலாச்சாரம் போன்ற அரசாங்கத்தின் தோல்வியைத் திசை திருப்புவதற்காக, இந்து கலாச்சாரத்துக்குத் தடை விதிக்கின்றனர்.
திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்றவரையும், திருக்குறள் தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம் என்ற ஈ.வெ.ரா., போன்றவர்களைக் கைது செய்யவில்லை. ஆன்மீக பேச்சாளர் திருவள்ளுவரின் உண்மை விஷயங்களை எடுத்துப் பேசியதற்காக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அவர்கள் ஹிந்து தர்மத்தின் மீதும், பிராமணர்கள் மீதும் வெறுப்புணர்வோடு செயல்படுகின்றனர். பிராமண இன ஒழிப்பு கொள்கையை இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது.