திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிக்கு இந்தக் கூட்டணியின் சார்பில் கிருஷ்ணகோபால் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மணப்பாறையில் தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக திண்டுக்கல் சாலையில் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கட்சித் தொண்டர்கள், செயல்வீரர்கள் கூட்டத்திற்கு இருச்சக்கர வாகனத்தில் பேரணியாக மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
வேட்பாளர் அறிமுகத்திற்கு பின் பேசிய கிருஷ்ணகோபால், "நான் வெற்றிபெற்றால் கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவேன். யாரையும் குறைகூறி வாக்கு கேட்கவேண்டாம், நாம் செய்யவேண்டியதை சொல்லி வாக்கு கேட்போம். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு இந்தத் தொகுதியில் வாக்கு கூட இல்லை. ஆனால் நாம் பதவியில் இல்லாவிட்டாலும் தனியார் பின்னலாடை தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தோம்.
’பதவியில் இல்லாதபோதும் தொழிற்சாலைகளை கொண்டு வந்தவன் நான்’ - மணப்பாறை தேமுதிக வேட்பாளர் இந்தத் தொழிற்சாலையால் இப்பகுதியைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் பணியாற்றி பயனடைந்து வருகின்றனர். நான் அரசியலில் ஒரு ரூபாய் சம்பாதிக்க விரும்பவில்லை. ஊழல் செய்ய மாட்டேன். மக்களுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். மணப்பாறை தொகுதியை வளமிக்க பகுதியாக மாற்றுவேன்" என உறுதியளித்தார்.
இந்த அறிமுகக் கூட்ட நிகழ்ச்சியில் அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.