திருச்சி:தீபாவளி பண்டிகை (Diwali festival) இந்து, சீக்கியம், சமணம், பெளத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையானது இம்மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ.5) பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர்.
இதற்காக, திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களான தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தருகின்றனர். திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை தெப்பக்குளம், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, NSB ரோடு பகுதிகள் திருச்சி மாநகரத்தின் இதய பகுதியாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் தான், அனைத்து விதமான கடைகளும் அமைந்துள்ளன.
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகள், ஆடை அணிகலன்கள், காலணிகள், இனிப்புகள் வாங்க இந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்படுகிறது. எனவே, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 186 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.