திருச்சி:கரோனா படிப்படியாக குறைந்த நிலையில் மாணவர்களின் கல்விசூழலைக் கருத்திற்கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. அதேநேரம் மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் விளையாட்டுப் போட்டிகளும் தற்போது மீண்டும் நடத்தப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே கபடி, பேட்மிண்டன் போட்டியானது திருச்சி நெடுஞ்சாலை 1 சுங்கச்சாவடி அருகிலுள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. 18 வயதிற்குள்பட்டோருக்கான ஆடவர் கபடிப் போட்டியில் திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 27 அணிகள் பங்கேற்றன.
நாக்அவுட் முறையிலான போட்டியில் ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி அணியை 29-12 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் டால்மியா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, ஆர்சி மேல்நிலைப் பள்ளியை 24 - 22 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.
மாணவர்களிடையே நடந்த போட்டிகள் இதனிடையே ஆடவர் 9, 10, 11, 13, 15, 17 வயதிற்குள்பட்டோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 25 வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். இப்போட்டிகளை ஏராளமான மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கண்டு ரசித்ததுடன், வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிங்க:மனிதநேயம் பற்றி பேசிய சிறுவன் அப்துல் கலாமுக்கு வீடு... முதலமைச்சர் அதிரடி...