தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆற்றுப் பாலத்தை சீர்செய்யக் கோரி நூதன போராட்டம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

திருச்சி: காவிரி ஆற்றுப் பாலத்தை சீர்செய்யக் கோரி சாக்குப் போட்டி நடத்தி நூதன போராட்டம் நடைபெற்றது.

நூதன போராட்டம்
நூதன போராட்டம்

By

Published : Sep 21, 2020, 7:00 PM IST

திருச்சி சிந்தாமணி ஓடத்துறை முதல் மாம்பழச்சாலையை இணைக்கும் வகையில் 1976 ஆம் ஆண்டு 1.25 கோடி ரூபாய் செலவில் 15 மீட்டர் அகலத்தில் 541.46 மீட்டர் நீளத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.

அப்போதைய மத்திய உள்ளாட்சி துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டி, தமிழ்நாடு ஆளுநரின் ஆலோசகர் சுப்ரமணியம் ஆகியோரால் திறக்கப்பட்டது. இந்நிலையில் பாலம் பழுதடைந்த காரணத்தால் 2016 ஆம் ஆண்டு 1.70 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது.

அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் பாலத்தின் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தினந்தோறும் விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது எனவும், இதனால் தரமற்ற சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (செப்டம்பர் 21) இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினர் அந்தப் பாலத்தில் சாக்கு போட்டி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறை, நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் அங்கு வந்து பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

பாலத்தை சீரமைக்கவில்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் வீரமணி கூறுகையில்,
“பாலத்தில் அதிர்வைக் குறைக்கும் வகையில் பேரிங் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேரிங் பழையதாகி விட்டதால் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்லும் காரணத்தால் சாலைகளில் உள்ள இணைப்புகளில் விரிசல்கள் ஏற்படுகிறது. விரைவில் அந்தப் பேரிங்கை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது”
என்றார்.

ABOUT THE AUTHOR

...view details