தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்எஸ்பி ரோடு, பெரியகடைவீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக இப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். இந்த வகையில் என்எஸ்பி ரோடு-நந்தி கோயில் தெரு சந்திப்பு பகுதியில் புதிய புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் இன்று திறந்துவைத்தார். மேலும் பிரத்யேக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் அவர் இயக்கி வைத்தார்.
திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான கோட்டை காவல் நிலையம், மலைக்கோட்டை காவல் நிலையத்திற்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆணையர் லோகநாதன் கூறுகையில்,“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர் கோட்டை, காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பிற்காக 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்திரம் பேருந்து நிலையம் முதல் மலைக்கோட்டைவரை பல்வேறு பகுதிகளில் 127 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இரண்டு இடங்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.