திருச்சி:மணப்பாறை அடுத்த காடப்பிச்சம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் நேற்று முன்தினம் (ஜன 24) உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு ஊர்வலம் நேற்று (ஜன 25) மாலை ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் கணேஷின் உறவினர்களோடு நடைபெற்றுள்ளது.
அப்போது அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அரசு புறம்போக்கு இடமான ஒழக்குத்தாறு தடுப்பணை அருகே குழி வெட்டப்பட்டது. ஆனால்,அங்கு இறந்தவரின் உடலை புதைக்கவிடாமல் அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் செல்வம் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பல மணி நேரம் ஆற்றங்கரையில் கிடப்பில் போடப்பட்ட சடலம் இதுகுறித்து காவல் துறையினருக்கும், வட்டாட்சியருக்கும் பொதுமக்கள் தகவல் அளித்த நிலையில், தகராறில் ஈடுபட்ட நபரிடம் பொதுமக்கள் தாங்களாகவே சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், தகராறில் ஈடுபட்டவர் அதனை ஏற்க மறுத்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சடலத்துடன் பொதுமக்களை ஆற்றங்கரையிலேயே காக்க வைத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற புத்தாநத்தம் காவல் துறையினர் பிரச்னையில் ஈடுபட்ட நபரை அப்புறப்படுத்தி இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உதவினர்.
இதையும் படிங்க: பழுதடைந்த மின்மாற்றிகள் மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி - களத்தில் இருப்பதோ வேற நிலை..!