திருச்சி:மாமூல் கேட்டு குடிபோதையில் ரகளை செய்த கல்லக்குடி திமுக நகரச் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பால்துரை உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல் நிலையத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனம் இன்று (ஜூன் 19) புகாரளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த நிலையில், கல்லக்குடி திமுக நகர செயலாளராகவும், கல்லக்குடி பேரூராட்சி தலைவராகவும் பால்துரை என்பவர் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த ஜூன் 16ஆம் தேதி இரவு, இந்த டால்மியா சிமெண்ட் கம்பெனியில் பால்துரை தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி உள்ளே புகுந்து பாதுகாப்பு அலுவலர்களைத் தாக்கியும் நிறுவனத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மேஜை உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கல்லக்குடி திமுக நகர செயலாளரும், கல்லக்குடி பேரூராட்சி தலைவருமான பால்துரை உள்ளிட்ட மூன்று பேர் மீது டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அந்நிறுவனத்தினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, இவ்வாறு சிமெண்ட் தொழிற்சாலை முன்பு இரவு நேரத்தில் ரகளை செய்த போது, இவர்கள் மதுபோதையிலிருந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தொழிற்சாலையின் முன்பு ரகளையில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பகலில் 40, இரவில் 50.. சென்னையில் புதிய ஸ்பீடு விதிகள் அமல்.. மீறினால் ஃபைன் எவ்வளவு தெரியுமா?