திருச்சி:இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவர் அருந்திய குளிர்பானத்தில் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் இருவர் சிறுநீர் கலந்து கொடுத்து குடிக்க வைத்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பல்கலைகழக துணை வேந்தரால் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழு வரும் 18 அல்லது 19 ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகம். இந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படித்து வரும் பட்டியலின மாணவர் ஒருவர், அவருடன் படிக்கும் சக மாணவர்கள் இருவர் மீது புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின் படி கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாலை, பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும் அவருடன் இளநிலை இறுதியாண்டு சட்டப் படிப்பு படிக்கும் வேறு சில மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சந்தித்து உள்ளனர்.
அவர்கள் தங்களின் தேர்வுகள் தொடர்பாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாகப் புகாரில் அவர் கூறியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தின்படி, வழக்கமான தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் மறுதேர்வுகள் நடந்துள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் தன் புகாரில் அவரும் மற்ற மாணவர்களும் இணைந்து தங்களது படிப்பு குறித்து ஆலோசித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மாணவர்கள் குளிர்பானம் அருந்தி உள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர் குடித்த குளிர்பானத்தில் மட்டும் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதை தான் தெரியாமல் குடித்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தன் புகாரில் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த சம்பவம் ஜனவரி 6 ஆம் தேதி இரவு சுமார் 12 மணியளவில் நடந்ததாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர் தன்னுடன் படிக்கும் இரு மாணவர்கள் மீது ஜனவரி 10ஆம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இண்டிகோ விமானி மீது தாக்குதல்! என்ன காரணம்? வீடியோ வைரல்!