தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பிணம் எரிக்கும் வேலை செய்யாவிட்டால் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்போம்’

திருச்சி: சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலையை செய்யவில்லை என்றால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மிரட்டியதாக ஐஜியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

dali police compaint about discrimination
dali police compaint about discrimination

By

Published : Dec 3, 2019, 9:51 AM IST

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், உத்தமர்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (40). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது குடும்பத்தாருடன் இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி அமல்ராஜை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார்.

அதில், ‘எனது மூதாதையர் நிலத்தில் நான் வசித்து வருகிறேன். அந்த இடத்தில் கழிப்பிடம் கட்ட முயற்சி செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தார். இதன்பின்னர் கலைச்செல்வன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் சிவமணி சுப்பிரமணி, நடராஜன் உள்ளிட்ட 20 பேர் வாகனங்களில் வந்து எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். அதோடு எங்களது மூதாதையர்கள் செய்த தொழிலான சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பட்யலின மக்கள் குற்றச்சாட்டு

அந்த பணிகளை மேற்கொண்டால்தான் மூதாதையர்களின் நிலம் உங்களுக்குச் சொந்தம். இல்லை என்றால் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும். இதை மீறினால் ஊருக்குள் வந்து பால், பருப்பு, ரேஷன் பொருள் என எதுவும் வாங்க முடியாது. உங்களது குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டினர். அதனால் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தாங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து என்னை மிரட்டியவர்கள் மீதும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவதாக மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இவரின் மனுவைப் பெற்றுக் கொண்ட ஐஜி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சடலத்தை சாக்கடை வழியாகக் கொண்டுசெல்லும் அவலநிலை!சடலத்தை சாக்கடை வழியாகக் கொண்டுசெல்லும் அவலநிலை!

ABOUT THE AUTHOR

...view details