திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ 197.5 கிராம் எடையுள்ள ரூ.72 லட்சத்து 73 ஆயிரத்து 781 மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் (Trichy International Airport) இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
விமானம் மூலம் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. விமானத்தில் வந்த பயணி மூன்று பேர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை (Air Intelligence Customs Officers) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 ஆண் பயணிகள் மற்றும் 1 பெண் பயணி உடலில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.72 லட்சத்து 73 ஆயிரத்து 781 மதிப்புள்ள 1 கிலோ 197.5 கிராம் மதிப்புள்ள ஆகும். இதனையடுத்து தங்கம் எடுத்து வந்த 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.