தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜுலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலிலிருக்கும்போது, திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள், கோயில் திருவிழாக்கள் என எங்கும் மக்கள் கூடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் எம்எல்எம் நிறுவன கூட்டத்திற்காக மக்களைக் கூட்டிய நிறுவனத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பிஃன் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் முறைகேடு நடைபெறுவதாக பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் கூறப்பட்டு வந்தன. சமீபத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி எல்பிஃன் நிறுவனத்தின் வழக்கமான கூட்டம் இன்று அந்த அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தகுந்த இடைவெளி இன்றியும், முகக்கவசம் அணியாமலும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கண்டோன்மென்ட் காவல் துறையினர் விரைந்துவந்து கூட்டத்தைக் கலைத்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அதோடு இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.