திருச்சிமாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். இவர் கடந்த 12 வருடங்களாகக் காஷ்மீரில் துணை ராணுவ படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணி முசிறி அருகே உள்ள பேரூர் கிராமத்தில் மாமனார், மாமியார் மற்றும் கை குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு பேரூர் கிராமத்தில் கதவைத் திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்த கலைவாணி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் எட்டரை பவுன் மதிப்பிலான தாலி சங்கிலியைப் பறித்துச் சென்றார். இது குறித்து ஜெம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ராணுவ வீரர் நீலமேகம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் தாலி சங்கிலி பறித்து சென்ற நபரைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பேசி சமூகவலை தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது.