திருச்சி: புதுக்கோட்டை மாவட்ட காவல் துறைக்கு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தடுப்பு வளையங்கள் உள்ளிட்ட சாதனங்களை வழங்கியது. இதனை காவல் துறையிடம் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில், கரோனா விழிப்புணர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 25 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு, இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழாவும் இன்று (மே.11) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு, இருசக்கர வாகனங்களை காவல் உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.
பின்னர் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா செய்தியாளர்களிடம் கூறுகையில், ' திருச்சி சரகத்தில் முதல்கட்டத்தில் 85% காவலர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இரண்டாவது கட்ட நிலையில் 45 விழுக்காடு பேர், இரண்டாவது கட்டமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இரு வாரத்திற்குள் காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பணி முடிக்கப்படும். முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.