திருச்சி:நீட் தேர்வு மூலம் தான் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என கூறுவது திசை திருப்பும் கருத்து என மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் நல சங்க மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களின் ஊதியத்தை 20 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக குறைக்கும் அரசாணை 219ஐ ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வார்டு மேலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 20 ஆயிரம் ரூபாயாகவும், டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கான அடிப்படை ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாகவும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பத்தாண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஈ.பி.ஃஎப், இ.எஸ்.ஐ. மகப்பேறு விடுப்பு சலுகைகள் வழங்க வேண்டும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் பணியாளர்களாக வரையறுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன், "மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நிறைவேற்றி தர வேண்டும்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்தது அமலாக்கத்துறை!
ஆளுநர் ஆர்.என்.ரவி வகிக்கும் பொறுப்பு உயரிய பொறுப்பு. அந்த பொறுப்பிற்கு மேலும் பொறுப்பு சேர்க்கும் வகையில் ஆளுநர் செயல்படவில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதியாக, பா.ஜ.க வின் மிகச்சிறந்த தொண்டராக செயல்படுகிறார். அவர் ஆர்.எஸ் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது தவறானது. நீட் எதிர்ப்பு தீர்மானம் என்பது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இது தி.மு.க உள்ளிட்ட எந்த கட்சியின் தனிப் பிரச்சினையும் அல்ல, மாறாக இது ஒரு பொது பிரச்சினை.
நாட்டிலேயே மிகச்சிறந்த மருத்துவர்களும், அதிக மருத்துவ கல்லூரிகளும் இருப்பது தமிழ்நாட்டில் தான். இங்கு பணியில் இருக்கும் சிறந்த மருத்துவர்கள் யாரும் நீட் தேர்வை எழுதவில்லை. உலக நாடுகளிலில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற தமிழ்நாட்டிற்கு தான் வருகிறார்கள்.
நீட் தேர்வால் தான் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்பது அப்பட்டமான பொய் மட்டுமல்ல, திசை திருப்பும் நடவடிக்கையும் ஆகும். நீட் தேர்வு மூலமாக பயன்பெறுபவர்கள் கோச்சிங் செண்டர்கள் தான். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது ஆளுநருக்கு மாற்று கருத்து இருக்குமேயானால் அது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதலாம் அல்லது முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசலாம்.
ஆனால் மசோதாவிற்கு கையெழுத்தே போட மாட்டேன் என்கிற அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாங்குநேரி சம்பவம் எனது கடுமையான கண்டனத்திற்குரியது.
அந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு இருக்கிறது. குடும்பத்திற்கு அரசு உதவி செய்திருக்கிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறி உள்ளார். நாங்குநேரி சம்பவத்தை மணிப்பூரோடு ஒப்பிடுவது தவறானது" என முத்தரசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: களைகட்டிய 'ஆவிளிபட்டி மீன்பிடி திருவிழா'.. 10 கிலோ எடையிலான மீன்களை பிடித்து மக்கள் கொண்டாட்டம்!