திருச்சி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்கிற மையக்கருத்தில் மாற்றத்தை நோக்கி என்கிற நடைபயண இயக்கம் இன்று (மே 05) தொடங்கப்பட்டது. திருச்சி உறையூரில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு அந்த நடைபயண பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, ''பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. எங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்கள். இங்கு தொடங்கிய பிரசாரம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த பிரசார இயக்கத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும்'' எனத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பிரசார இயக்கத்தை முன்னிட்டு மாற்றத்தை நோக்கி என்கிற தலைப்பில் அச்சிடப்பட்ட பிரசுரத்தை அமைச்சர் கே.என். நேரு வெளியிட, அதனை முத்தரசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இன்று காரல் மார்க்ஸின் 205ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அங்கு இருந்த அவருடைய உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என். நேரு, முத்தரசன் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ''பாஜக ஆட்சி ஜனநாயகத்தின் மீது கடுகளவும் நம்பிக்கையற்று, சர்வாதிகாரத்தின் மீதும் பாசிசத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட ஆட்சியாக இருக்கிறது. அதனால் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தான் செய்து வருகிறார்கள்.
எனவே, பாஜக-வின் உண்மை முகத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மாற்றத்தை நோக்கி என்கிற நடைபயண இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறோம். இன்று தொடங்கப்பட்ட இந்த பிரசார இயக்கம் மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் சென்று பாஜக குறித்தும் மோடி குறித்தும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தவறானது என எடுத்துக்கூற இருக்கிறோம். இதற்காக மாற்றத்தை நோக்கி என்கிற பிரசுரத்தை 10 லட்சம் பிரதிகள் அச்சிட்டு, அதை மக்களிடையே விநியோகம் செய்ய இருக்கிறோம்.
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றிருக்கும் பொறுப்பு மிக மதிக்கத்தக்க கண்ணியமான பொறுப்பு. அந்த கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆளுநர் பொறுப்பேற்றது முதல் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக நேற்று அளித்த பேட்டியில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தது அனைத்தும் தவறு எனக் கூறி உள்ளார். அந்த உரை என்பது அரசின் சார்பில் தரப்படுவது, அந்த உரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் அளித்த பின்னர் தான் அச்சிடப்படும். அந்த உரையின் மீது கருத்துக்கூறக் கூடியவர் ஆளுநர் அல்ல, அது சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமை அப்படியிருக்கையில், அந்த உரையில் இருந்த அனைத்தும் தவறு என அவர் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.