திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை அடுத்த பாலகிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜசேகர்(45). இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று (மே.14) மாலை வயல் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றதை அடுத்து, இரவு 10 மணியளவில் மீண்டும் வயலுக்கு சென்றுள்ளார். அப்போது தொழுவத்திலிருந்த 6 வயதுடைய சினை பசுமாடு காணாமல் போயிருந்தது.
இதனைத் தொடர்ந்து கொட்டகையின் அருகே இருந்த 120 அடி கிணற்றில் பசுமாடு விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கிணற்றில் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால், மாடு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. பின்னர் இதுகுறித்து உப்பிலியாபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.