திருச்சி மாவட்டம், துறையூரில் அண்ணன், தம்பி 2 பேர் வெவ்வெறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்கள். இருவரும் தொலைக்காட்சியைச் சரிசெய்யும் தொழில் செய்துவருகின்றனர். இவர்களின் 72 வயது தாய் சரோஜா, சர்பிட் நகரிலிருந்த இளைய மகன் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி இளைய மகனின் மனைவி திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவந்தபோது கரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய மனைவி திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது மனைவியுடன் சரோஜாவின் இளைய மகனும் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் அவருடைய வீட்டில் தங்கியிருந்த சரோஜா கடந்த 10ஆம் தேதியன்று துறையூரில் உள்ள அவரது தம்பி வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மீண்டும் ஜூலை 11ஆம் தேதி தனது இளைய மகன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அப்போதும் வீடு பூட்டியிருந்துள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் இரண்டு நாள்கள் தங்கியுள்ளார். இச்சூழலில் சரோஜாவுக்கு அதிகளவில் இருமலும், காய்ச்சலும் ஏற்படவே அந்தத் தெருவில் வசித்துவருபவர்கள் சரோஜாவை மூத்த மகன் வீட்டிற்கு ஆட்டோ மூலம் அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் (ஜூலை 13) இரவு 9 மணி அளவில் மூத்த மகனுடன், சரோஜா துறையூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு கரோனா பரிசோதனை தற்போது செய்ய இயலாது எனவும், காலையில் வந்தால் போதும் எனவும் மருத்துவப் பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.