திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி கூட்டம் இன்று (ஜூலை 28) மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், 98 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் அன்பழகன் பேசுகையில், “மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. அதற்காக எனது சார்பிலும், மாமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
தொடர்ந்து, அனைத்து கவுன்சிலர்களும், தங்களது பகுதிகளில் குடிநீர் பிரச்னை இருப்பதாக குற்றம்சாட்டினர். இது குறித்து கவுன்சிலர் மலர்விழி பேசுகையில், “பி.ஜி.நகர், சிற்பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்” என்று கூறினார். மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பைஸ் அகமது பேசுகையில், “மதிப்பூதியம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது. இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அதற்கு பதில் அளித்து மேயர் பேசுகையில், “தவறான தகவல்களை கூறக்கூடாது. தினம்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மாநகராட்சி திருச்சி மாநகராட்சி மட்டும் தான். 25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னை இல்லாத அளவிற்கு அமைச்சர் நேரு திட்டங்களை திருச்சியில் செயல்படுத்தி உள்ளார். எனவே, தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து மண்டல குழு 3-ன் தலைவர் மதிவாணன் பேசுகையில், “திருச்சியில் புதிதாக அமையவுள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். திருச்சி தெப்பக்குளம் கோட்டை நுழைவாயிலுக்கு அன்பில் தர்மலிங்கம் பெயர் சூட்ட வேண்டும்” என்றார். திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுகையில், “பட்ஜெட்டில் வார்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தீர்கள்? அது எப்போது அமலுக்கு வரும்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து மேயர் பேசுகையில், “கவுன்சிலர்களுக்கான அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில், “தூய்மைப் பணியாளர்களுக்கு 525 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது; இது கண்டனத்திற்குரியது.
சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபடுபவர்கள் குடித்துவிட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் திருச்சியில் ஒரு கல்லூரிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏற்புடையது அல்ல” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட இ.கம்யூ சுரேஷ், “தூய்மைப் பணியாளர்கள் குடித்துவிட்டு வருவதாக கூறுவது தவறு” என்றார். தொடர்ந்து, மேயர் அன்பழகன், ”தவறாக பேசியதை மாமன்ற உறுப்பினர் வாபஸ் வாங்க வேண்டும்” என கேட்டுக்கொணார்.
இதைத்தொடர்ந்து, “நான் பேசியதை வாபஸ் வாங்குகிறேன் என்று கவுன்சிலர் செந்தில்நாதன் கூறினார். அப்போது, திருச்சி பஞ்சப்பூரில் புதிய மார்க்கெட் கட்டுவதாக கூறியுள்ளீர்கள். அதற்கான விளக்கத்தை கூறுங்கள் என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மேயர் அன்பழகன், “திருச்சி கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டில் வசதிகள் சரிவரவில்லை. பாதுகாப்பு இல்லை. மூட்டைகளை மேலே சுமந்து செல்ல முடியவில்லை’’ என வியாபாரிகள் குறை கூறுகின்றனர்.