திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்தக் குழந்தைகளின் தந்தை சமய மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திருச்சி எடத்தெரு கீழப்புதூர் பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அங்கு சென்று அவரது மனைவி, குழந்தைகள் மட்டுமின்றி அந்த வீட்டிலிருந்த 12 பேரையும் கரோனா சோதனை செய்துள்ளனர். இதில் ஏற்கனவே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவருபவரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.