கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்குதல் காரணமாக மார்ச் 24ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் மூன்றாம்கட்ட ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனினும் நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பல அரசு அலுவலகங்கள் முடங்கியுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சமூகவிரோதச் செயல்கள் ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கின.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடத்த முயற்சி அரங்கேறியுள்ளது. இதை மாவட்ட சமூக நலத் துறையும், சைல்டுலைன் 1098 அமைப்பும் தடுத்து நிறுத்தியுள்ளன.
கடந்த மார்ச் 24ஆம் தேதிமுதல் சைல்டு லைனுக்கு தங்களது திருமண ஏற்பாடு குறித்து 10 குழந்தைகள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் தமிமுனிஷா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முரளிகுமார் ஆகியோர் நேரடியாகச் சென்று நடவடிக்கை எடுத்து திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.