திருச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தனியார் அமைப்பு நிர்வாகி அல்லிராணி, துணைத் தலைவி டாக்டர் ரமணி தேவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரமணி தேவி பேசுகையில், 'கொரோனா வைரஸ் நோய் தற்போது ஈரான், இத்தாலி, சீனா, கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவிவருகிறது.
கடந்த மாதம் சீனாவில் இந்த நோயால் தினமும் 3,500 பேர் பாதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின. தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் காரணம். இந்நோய்க்கான தடுப்பு மருந்து, சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதன் தன்மையை மாற்றி வருகிறது. தினமும் ஒரு தன்மையில் அந்த நோய் பரவுகிறது.
இந்நோய் கிருமிகள் தற்போது அடுத்த தலைமுறைக்கும் பரவிவிட்டது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆளாகியவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது. தற்போதைய சூழ்நிலையில் இதற்குச் சிகிச்சை முறை, மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சீனாவிலுள்ள மூலிகை மருந்துகளுக்கு நிகராக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகளவில் மருந்துகள் உள்ளன. அதனால், நமது பாரம்பரிய உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். உணவில் மிளகு காரம்தான் சேர்க்கப்படவேண்டும். மிளகாய் காரம் சேர்க்கப்படுவதால் அல்சர் போன்ற நோய்கள் வருகின்றன. கொரோனா நோயைத் தடுக்க கை கழுவும் முறையைச் சிறந்த தடுப்பு முறையாகும்.
மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போது கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு செல்லக்கூடாது. ஏற்கெனவே அதில் படிந்திருக்கும் கிருமிகள் நம் கை மூலம் பரவும். கொரோனா மட்டும் கிடையாது. இதர வைரஸ் நோய்களும் இதன் மூலம் பரவும். நமது நாடு தூசிகள் நிறைந்த நாடு. அதனால் கை கழுவும் பழக்கத்தை வழக்கமாக மேற்கொள்ளவேண்டும். நம் கைகள் மூலம் மூக்கு, வாய் போன்றவற்றை அடிக்கடி தொடக்கூடாது.