முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை அரசியல் சட்டத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், பேரறிவாளன் தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று (மே19) காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
திகில் கிளப்பும் திருச்சி வேலுச்சாமி இந்தநிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தின் போர்வாளாகவும் ஈட்டி முனைப்பேச்சுக்களாலும் நன்கு அறியப்பட்டவர் திருச்சி வேலுச்சாமி திருச்சி அருகே உள்ள நச்சலூரைப்பூர்வீகமாக கொண்டவர் தன்னுடைய பிடி(வாதத்தில்) இம்மியளவும் மாறாதவர். திருச்சி வேலுச்சாமி காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் ஏழு தமிழர்களின் உரிமைகளுக்காக ஆரம்பம் முதலே தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள அரசியல் சதிகள் குறித்து விரிவான பல ரகசிய தகவல் அடக்கிய 'தூக்குக் கயிற்றில் நிஜம்' என்ற புத்தகத்தையே அவர் எழுதியுள்ளார். மேலும், ஏழு தமிழர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளுக்காக முதல் குரலை எழுப்புவேன் என்று காலம் காலமாகத் தொடர்ந்து தெரிவித்து வந்து இருக்கிறார்.
மேலும், ''ராஜீவ் கொலைவழக்கில், புலிகளைத் தவிர உலகநாடுகளின் சதியும் இருக்கிறது'' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதையெல்லாம் ஒரே நேர்கோட்டில், கொண்டுவந்து தீவிரமாக விசாரித்தால், இந்திய அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களும், அவர்களுக்குப் பின்னே உள்ள வெளிநாடுகளின் சதிவேலைகளும் அம்பலமாகும் என ஜெயின் கமிஷனில் சென்று சாட்சி சொன்ன திருச்சி வேலுச்சாமியின் வாக்குமூலம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் அவர், நிச்சயமாக வெளிநாடுகளின் பின்னணி இல்லாமலும், இந்திய அரசியல் தலைவர்களின் சதிச்செயல்கள் இல்லாமலும் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களையும் ஜெயின் கமிஷனில் சமர்ப்பித்தவர்.
அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம், இனி நம்முடைய கேள்விக்கணைகளையும், அவர் அளித்த பதில்களையும் காணலாம்.
திருச்சி வேலுச்சாமி பேட்டியின் காணொலி வடிவம் கேள்வி: ஒரு தமிழரா பேரறிவாளன் விடுதலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: தமிழர் தெலுங்கர் என்ற கேள்வியை விட ஒரு மனிதராக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பதே சரியான கேள்வி. மனித வாழ்க்கை என்பது அற்புதமானது இறைவன் வழங்கிய கொடை, எந்த காரணத்திற்காகவும் ஒருவர் 30 ஆண்டுகள் சிறையில் இருப்பதை மனிதாபிமானம் உள்ளே யாரும் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைய முடியாது. அந்த வகையில் எனக்கு நேரடியாக எந்த சம்பந்தம் இல்லாவிட்டாலும் அவர்கள் வெளியில் வருவது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கேள்வி:காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து கொண்டு உங்கள் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த நேரத்தில் இந்தக் கருத்தை நீங்கள் வலியுறுத்துவது ஏன்?பதில்: உங்கள் வினாவே தவறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பு அகில இந்திய தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் தெளிவாகத் தலைவராக இருக்கும்போது சிங்கப்பூரில் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அளித்த பேட்டியில், நானும் என்னுடைய தங்கையும் குடும்பத்தாரும் இந்த சிறையில் உள்ள ஏழு பேரையும் எப்போதோ மன்னித்து விட்டோம். சட்டரீதியாக அவர்கள் வெளியில் வருவதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று சொல்லிவிட்டார். அவர்களைத் தாண்டி நீங்களாகக் கற்பனை செய்யும் யாராவது தலைவர் என்று நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
கேள்வி: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறாரே?
பதில்: கே.எஸ்.அழகிரி அவரே சொல்லிவிட்டார் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று.
கேள்வி:தனிப்பட்ட கருத்துக்கு இயக்கம் துணை போகுமா?
பதில்: துணை போவதும் அவங்கவங்க விருப்பம்.
கேள்வி:பேரறிவாளன் விடுதலையான சட்டப்பிரிவு 142 பயன்படுத்தி நீட்க்கு விலக்கு வாங்கிவிட முடியுமா?
பதில்: எது வேண்டும் பண்ணலாம் சட்டத்துக்கு உட்பட்டு. இது வேற பிரச்சனை அது வேற பிரச்சனை இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இந்த பிரச்சனையில் இன்று ஒரு தெளிவு வந்து இருக்கிறது அது என்னவென்றால் கடந்த 23 ஆண்டுகளில் நடந்தவற்றை யோசித்துப் பாருங்கள். ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசமைப்புச் சட்டம் 161 கீழ் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் மகாத்மா காந்தியின் கொலையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்த கோபால் கோட்சே வை மத்திய அரசு விடுதலை செய்யவில்லை, ஜனாதிபதி விடுதலை செய்யவில்லை, மகாராஷ்டிரா மாநில அரசு விடுதலை செய்தது.
தமிழ்நாட்டில் மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் தர்மபுரியில் உயிருடன் கொளுத்தப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த மூன்று நபர்களை மாநில அரசு தான் விடுதலை செய்தது. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த அடிப்படையில் இதுவும் அந்த வழக்கில் இணைத்து தான் பார்க்க முடியும். இவர்களுக்கு தனி அவர்களுக்கு தனி இந்த கட்சிக்கு ஒரு சட்டம் அந்த கட்சிக்கு ஒரு சட்டம் என்று கிடையாது.
மாற்றம் இருந்திருந்தால் கூட்டணி சேரும்போது இருந்திருக்கும். தேர்தல் நடக்கும்போது ஓராண்டுக்கு முன்பாகவே இந்த ஏழு பேரை விடுதலை செய்வோம் என்று திமுக அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் போட்டது. மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னது.
இப்படி இவர்கள் இதுதான் முக்கியமான கொள்கை என்று சொன்னால், அந்த தேர்தல் நேரத்தில் முற்றிலும் இதற்கு மாறான கொள்கை வைத்திருந்த இந்த கூட்டணியில் சேராமல் இருந்தால்தான் இவர்கள் சொல்வதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று அழகிரி உட்பட இதை சொன்னால் அவர்களிடம் நான் தெரிவிக்கிறேன். எப்போது அந்த கூட்டணியில் சேர்ந்து விட்டார்களோ இப்போது அதைப் பற்றி பேசுவது என்பது நாடகமாடுகிறார்கள் என்றுதான் நடுநிலையாளர்கள் என்பார்கள் அப்படி நினைப்பதில் தவறில்லை என்பது என்னுடைய கருத்து
கேள்வி: வருங்காலத்தில் திமுகவுடனான கூட்டணி தொடருமா?
பதில்: எதுவுமே கல்வெட்டு சாசனம் அல்லது மாறலாம். இதுதான் அவர்களுடைய கொள்கை என்றால் கூட்டணியில் இணைந்து இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகளை கடந்த சுதந்திர இந்தியாவில், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யக் கூடிய விஷயத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்றே தெரியாமல் இத்தனை ஆண்டுகாலம் சுற்றி வந்து இருக்கிறது.
இது இன்னும் கொஞ்ச காலம் நீடித்திருந்தால் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நாகரிக சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்திய நாட்டின் நீதித்துறையை, இந்திய நாட்டின் சட்டத்தை மற்றும் இந்திய நாட்டின் புலனாய்வுத் துறையை பார்த்து கைகொட்டி சிரிப்பார்கள். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், இந்த வழக்கிற்காக இல்லாமல். இனிமேல் எந்த வழக்காக இருந்தாலும் அதற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் இந்த தீர்ப்பு தந்திருக்கிறது.
அந்த வகையில் எனக்கு இது ஒரு ஆறுதலைத் தந்துள்ளது. சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால், அதை திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்குச் சட்டத்தில் இடம் உள்ளது ஆனால் ஒருமுறை மட்டும் எதை திருப்பி அனுப்ப முடியும். அதன்பின் சட்டமன்றத்தில் இந்த தீர்மானத்தை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அழைப்பினால் அதில் ஆளுநர் கையெழுத்துப் போட வேண்டும்.
ஒவ்வொரு முறை பட்ஜெட் உரையின் போதும் ஆளுநர் தான் ஒரே வாசிப்பார்கள். ஆனால் அந்த உரையில் வாங்க வணக்கம் என்ற வார்த்தையைக் கூட ஆளுநர் சொல்ல முடியாது அரசாங்கம் என்ன எழுதி தருகிறது அதை தான் அவர் படிக்க வேண்டும். அரசாங்கத்தின் மனசாட்சியாக தான் ஆளுநர் இருக்க வேண்டும். அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டது, ஆளுனர் மத்திய அரசின் ஒரு ஊழியரை போன்றவர்கள். மக்கள் பிரதிநிதி விட நியமனம் செய்யப்பட்ட ஒரு ஊழியருக்கு அதிகாரம் அதிகமாக இருக்குமாயின் அது சர்வாதிகாரம் ஜனநாயகத்தில் வராது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு தாயின் வெற்றி - பேரறிவாளனை மீண்டும் ஈன்ற அற்புதம்மாள்!