திருச்சி:மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ராஜன் நினைவு இல்லத்தில் காந்தியடிகள் திருவுருவப் படத்திற்கும், அதனைத்தொடர்ந்து உப்புச்சத்தியாகிரக நினைவுத்தூணிற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் தலைவர்களான தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியை அகற்றவும் காங்கிரஸ் ஆட்சியை அரியணை ஏற்றவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் திருச்சி முதல் வேதாரண்யம் வரையிலான உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரையை ப.சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்:பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “வெள்ளையனை துரத்தவேண்டும் என்பதற்காக நடைபயணம் மேற்கொண்டதனை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளையனை விட கொடிய மோடியும், அமித் ஷாவையும் தூக்கி எறிய வேண்டும். வெள்ளைக்காரர்கள் நாகரிகமானவர்கள் என்பதால் சாத்வீகமாக செய்தோம். இவர்கள் இருவரும் வன்முறை, அநாகரிகத்தின் உச்சம் என்பதுடன், நாம் பெற்ற சுதந்திரம் இவர்கள் கையில் இருப்பதால் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸார் தள்ளப்பட்டுள்ளனர்.
எந்த சாட்டைகளைக் கொண்டு மாடுகளை விரட்ட வேண்டுமோ அந்த சாட்டையைக் கொண்டு இந்த மாடுகளை விரட்ட வேண்டும். பிரதமர் மோடிக்கு மாடும், மாட்டுச் சாணமும், மாட்டு மூத்திரமும் தான் தெய்வம். மோடியையும், அமித் ஷாவையும் நாம் தைரியமாக எதிர்க்கவில்லை. இந்த நாடு சின்னாபின்னமாக போய்விடக்கூடாது என்பதற்காக எதிர்த்தாக வேண்டும். இந்தியை திணிக்கப்போகும் வேட்டையில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.
ஒருபடி மேலே சென்று மோடி பல கேடித்தனமான திட்டங்களை அறிவித்துள்ளார். மதம், சாதி, உணவு பழக்கத்தால் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் சோவியத் யூனியன் உடைந்ததுபோல மாநிலங்கள் பல நாடுகளாக உடையும். மொழி, உடை, மற்றும் வழிபாட்டு முறைகளில் தலையீட்டால் அப்படிப்பட்ட இந்தியா தேவையில்லை என்று எண்ணத் தோன்றும். வாழ்ந்தால் சுயமரியாதையோடு வாழ்வோம். தமிழ் மொழிக்கு இழுக்கு என்று சொன்னால் வீழ்வதே மேல்” என்றார்.