திருச்சி:ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் மத்திய அரசு கொண்டுவந்த 'அக்னிபத்' திட்டத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரியமுடியும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இந்த திட்டத்தில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தாலும், முற்றிலும் ரத்து செய்யக்கோரி தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் தொடர்கிறது.
அந்தவகையில் அதன்படி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர் தலைமையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர் எம்.பி. கூறுகையில், '4 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணி அமர்த்துவது என்பது இந்திய ராணுவத்தை மற்றும் ராணுவத்தின் முதுகெலும்பை பலவீனப்படுத்தும். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
ஆறு மாதம் மட்டுமே பயிற்சி கொடுத்து அனுப்பப்படும். ராணுவத்தினர் போதிய பயிற்சி இல்லாமல் நவீன ஆயுதங்களைக் கொண்டுள்ள சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை எதிர்த்து சண்டையிடுவது என்பது முடியாததாகிவிடும். நமது ராணுவ வீரர்களை பலவீனப்படுத்தி அண்டை நாடுகளுக்கு உதவுவது போல ஆகிவிடும். ராணுவத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கும் முழுமையான ராணுவ வீரர்களாக நவீன துப்பாக்கிகளை கையாளும் வகையில் முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.