திருச்சி:கும்பகோணத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து முதலீடுகளை பெற்று 300 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது பொது மக்கள் திருச்சி ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளனர்.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு அர்ஜுன் கார்த்திக் என்பவர் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை நடத்தி வந்து உள்ளார். இந்நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன.
இந்நிறுவனம் பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 18 மாதங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வட்டி எனவும், இதே தொகை 24 மாதங்களுக்கு செலுத்தினால் பத்தாயிரம் ரூபாய் வட்டி மற்றும் ஒரு கிராம் தங்க நாணயம் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இரண்டு லட்ச ரூபாய் செலுத்தினால் ஐந்து ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வட்டி, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 25 ஆயிரம் ரூபாய் வட்டி என கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து மக்களிடம் இருந்து பணத்தை நிறுவனம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த முதலீடுகளை அந்நிறுவனம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக முகவர்களை பணியமர்த்தி அவர்கள் மூலமாக தொகையை முதலீடாக பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது பணம் கொடுத்தவர்கள் நிறுவனத்தின் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் பனம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு உள்ளனர். நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரிக்க வசூல் முகவர்கள் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.