மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் பொறியாளர் முருகானந்தம் சார்பில் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், "நான் எம்எல்ஏ ஆனால்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மொத்தப் பரிசுத் தொகை 10 லட்சம் ரூபாயாகும். அனைவருக்கும் அரசியல் தேவை. அனைவரும் அரசியல் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அரசியல் பற்றிய தங்களது எண்ணங்களை தெரிவிப்பதற்காக கட்டுரைப் போட்டியும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும் விதமாக பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது.
பேச்சுப் போட்டி முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட்டது.போட்டிக்கான கட்டுரைகள் தபால் மூலம் பெறப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் காரணமாக போட்டியின் முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது .
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுச்செயலாளர் முருகானந்தம் கூறுகையில், ”அனைவருக்கும் அரசியல் தெரியவேண்டும் என்பதற்காக கட்டுரைப் போட்டியும் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களிலிருந்து பரிசுக்குரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக 15 ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிறந்த பேச்சாளர்களும், சிறந்த கட்டுரை எழுதியவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மொத்த பரிசு தொகை 10 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஆறுதல் பரிசும் அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு 40 ஆயிரம் ரூபாய் அதிகமாக்கி மொத்த பரிசு தொகை 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காசோலையாக அனைத்து வெற்றியாளர்களுக்கு அனுப்பப்பட்டது . வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் விழா மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நடைபெறவிருந்தது.
ஆனால் தற்போது நிலவி வரும் கரோனா தொற்று காரணத்தினால் பரிசு பெற்றவர்களுக்கான பரிசு தொகைகளும், ஆறுதல் பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொண்டு அரசியல் பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.