தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் சார்பில் திருச்சியில் நடைபெறும் பணிகளை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று ஆய்வுசெய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வனவர், வன பாதுகாவலர் என ஆயிரத்து 172 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அமைக்கப்பட்டு வரும் வன உயிரியல் பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்படும். ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி வழங்கப்படும்.
வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கொடுக்க சோலார் மூலம் மோட்டார் இயக்கப்பட்டு தொட்டியில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் யாரும் விடுபடாமல் பட்டா வழங்கப்படும். பழங்குடியின மக்களுக்காக செயல்படும் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணவர்கள் கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர்.
நாட்டின் மொத்த பரப்பளவில் 33.3 சதவீதம் பசுமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு தற்போது 18 சதவீத பசுமையை கடந்துள்ளது. தமிழ்நாட்டின் பசுமை 33.3 சதவீதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் வனப்பகுதி அதிகரிப்பில் வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை உயர்கிறது என்றால் அங்கே வனம் செழிமையாக இருக்கிறது என்று அர்த்தம். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக வனப்பகுதிகளில் தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, என்றார்.