திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் பழனி முருகன் கோயிலுக்கு அடுத்தபடியாக வருவாய் வரக்கூடிய கோயிலாக சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவந்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ரூ. 2000 கட்டணம் செலுத்தித் தங்கத் தேர் இழுத்து வந்தனர். தினமும் ஒரு சுற்றுக்கு 10 நிலைகளில் இந்தத் தேர் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் பழைய நிலையை வந்தடையும்.
ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 280 நாட்கள் தங்கத் தேர் இழுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளுக்காகத் தங்கத் தேர் நிகழ்ச்சி 2012ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. திருப்பணிகள் முடிந்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடந்துமுடிந்தது. ஆனாலும் தற்போது வரை தங்கத் தேர் நிகழ்வு இன்னும் தொடங்கப்படவில்லை. இது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அமைப்பு மனு அளித்துள்ளது.
அந்த அமைப்பின் மகளிர் அணித் தலைவி மகேஸ்வரி வையாபுரி கூறுகையில், “தங்கத் தேர் இழுக்கப்படாததால் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் மனம் வருந்துகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக தங்கத் தேர் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இதுவரை 56 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தங்கத் தேரை விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்து பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், குடமுழுக்கு பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. ராஜகோபுர குடமுழுக்கு நிறைவடைந்த பின்னர் தங்கத் தேர் இயக்கப்படும் என்றனர். குடமுழுக்குப் பணிகளை கோயில் நிர்வாகம் காரணம் கூறினாலும் ஆறு ஆண்டுகளாக தங்கத் தேர் இழுக்கும் நிகழ்வை ரத்து செய்திருப்பதை ஏற்க முடியாது. மாற்று ஏற்பாடு செய்து தங்களை உடனடியாக தங்கத் தேர் இழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.