தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் ஆக.15 வரை நீட்டிப்பு; திருச்சியில் முதலமைச்சர் அறிவிப்பு! - kuruvai cultivation package scheme deadline

திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 நிகழ்ச்சியைத் துவங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

cm stalin said kuruvai cultivation special package scheme deadline extended till august 15
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Jul 27, 2023, 3:18 PM IST

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் ஆக.15 வரை நீட்டிப்பு; திருச்சியில் முதலமைச்சர் அறிவிப்பு!

திருச்சி: வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில் நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்டப் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட வேளாண் சங்கமம்-2023 திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூலை 27) முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்சியில் தலைமை வகித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சி அரங்குகளை துவங்கி வைத்தார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினையும் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ''1990ல் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி, விவசாய விளைபொருள் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு 2 லட்சத்து 20 ஆயிரம் இலவச இணைப்புகள் தான் வழங்கியது. தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இலவச இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே சென்னையில் நடத்தப்பட்ட வேளாண் உற்பத்தியாளர் கண்காட்சி, தற்போது திருச்சியில் நடைபெறுகிறது. துணி உற்பத்தி, இயந்திரங்கள் உற்பத்தி போன்றவற்றிற்கு கண்காட்சி நடத்துவது போல வேளாண் கண்காட்சி நடத்துவதும் அவசியம். நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டு தொழில் நுட்பங்கள் என வேளாண்மை துறையில் ஏராளமாக வந்து கொண்டுள்ளன. அவற்றை பற்றிய அடிப்படை தகவல்களை விவசாயிகளுக்கும், வேளாண் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

அதற்காகத்தான் இதுபோன்ற வேளாண் கண்காட்சிகள் அவசியமானது. வேளாண் துறை அதிகம் வளர்ந்து வருகிறது என்பதற்கான அடையாளமாகவும் கண்காட்சி நடத்தப்படுகிறது. விளை பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கவும், அதற்கு உரிய விலை கிடைக்கவும் நவீன தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும். அதிக விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய பயிர் ரகங்கள், உத்திகள், சோலார் சக்தியில் இயங்கும் நவீன வேளாண் இயந்திரங்களை உழவர்களிடம் கொண்டு சேர்க்கவும் இது போன்ற கண்காட்சிகள் தேவை.

இதில், தமிழக வேளாண் துறை மட்டுமின்றி, மற்ற துறைகளும் பங்கெடுத்துள்ளன. இத்தகைய கூட்டு முயற்சி எல்லா துறைகளிலும் தேவைப்படுகிறது. வேளாண்துறை என்பது வாழ்க்கையாகவும் பண்பாடாகவும் இருந்தாலும் வருமானம் தரும் தொழிலாக மாற வேண்டும். உழவர்கள் உற்பத்தியாளராக மட்டும் இருந்துவிடாமல் அவர்களும் விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்பதற்காக தான் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது உழவர் சந்தைகளை அமைத்துக் கொடுத்தார்.

அதன் அடுத்த கட்டமாக தற்போதுள்ள ஆட்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மூலதன உதவி, கடன் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இவர்களின் உற்பத்திப் பொருட்களை மாநகராட்சி அங்காடிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் என்பது நிலம் இருப்போர் மட்டும் மேற்கொள்ளும் தொழிலாக இல்லாமல் விரும்பியவர்கள் அனைவரும் மேற்கொள்ளும் தொழிலாக மாற வேண்டும்.

நிலத்தை விட அதிக மதிப்புள்ள வேறு எதுவும் இல்லை. உழவர்களை மதிப்புக்குரியவர்களாக மாற்ற வேண்டும். உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால், வேளாண்மை வர்த்தக தொழிலாக மாறும். அதற்கு இது போன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும்.

மேலும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, 75 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தைப் பெறுவதற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உரிமைக்காக போராடினால் நடவடிக்கையா? - திமுக மாணவர் அணி கடும் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details