திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்கவும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சிக்கு வந்தார். அவரை விமான நிலையத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். இதனை அடுத்து, திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலமான தமிழ்நாடு, இந்திய திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருகின்றது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் இதயப் பகுதியாக இருக்ககூடிய திருச்சியின் பன்னாட்டு விமான நிலையத்தில் 1,112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில், தமிழ்நாட்டு மக்களின் சார்பாக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்த துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையம், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையம். இதை தமிழ்நாடு அரசு மேலும் ரூ.318.85 லட்சம் செலவில், 294.57 ஏக்கர் நில எடுப்பு செய்து, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், திருச்சி உள்பட சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்க 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரத்து 302.44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.