திருச்சி:வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் நேற்று (டிச. 30) திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோியில் பட்டர்கள் சுந்தர் பட்டர், நந்து பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மூலவர் ரங்கநாதரின் முத்தங்கி சேவையை தரிசனம்செய்த முதலமைச்சர், பின்னர் தாயார் சன்னதிக்குச் சென்று தரிசனம்செய்தார். இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசிபெற்றார்.